சங்க இலக்கியம் தமிழ் இனத்தின் அடையாளம். ஒன்பது கோடி தமிழர்களின் உயிர்த்துடிப்பாகவும் திகழ்கின்றது. மனித வாழ்வின் கலங்கரை விளக்கம் சங்க இலக்கியம். உலகளாவிய சிந்தனைகள் நிரம்பப்பெற்ற இவ்விலக்கிய வாசிப்பு பன்முகத்தன்மைக் கொண்டது. தமிழ் மொழியும் - நாடும் அன்பின் களமாகவும் எம்மொழியையும் ஏற்றுக்கொண்டு சிங்கநடைபோடும் தாழாத தலைமையினையும் பெற்றுள்ளன. எச்சமயத்தையும் ஆரத்தழுவிக்கொண்டு அன்பைப் பிரசவிக்கும் கருவறையாகவும் திகழ்கின்றது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியான பண்பட்ட இனத்தைக் காண்பது வியப்பளிக்கின்றது.


  சங்க இலக்கியத்தை உலகம் மக்கள் யாவரும் படித்து தத்தமது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு எவ்வித லாப நோக்கும் அற்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சித்ததின் விளைவே சங்க இலக்கிய ஆராய்ச்சி நடுவமும் சங்கஇலக்கிய.காமும். சங்க இலக்கியத்தை ஒவ்வொரு தமிழனின் வீட்டின் வரவேற்பறைக்கே அவர்கள் விரும்புகின்ற வடிவத்தில் சேர்க்கும் சிறுமுயற்சி இது. நூற்கள், கருவிநூற்களின் பட்டியல், அறிஞர்பெருமக்கள் வரலாறுகள், ஆய்வேடுகள், வகுப்பறைகள், நெறியாளர்கள், கல்வெட்டு எழுத்துப்பயிற்சி என்று நீங்கள் எதிர்பார்க்கும் இன்ன பிற வடிவங்களையும் வழங்க காத்துக்கொண்டிருக்கிறோம். மாதம்தோறும் பல போட்டிகள் இணையவழியில் நடத்தி நடுவுநிலைமையோடு வெளியிடுவதோடு சான்றிதழ்களும் வழங்க இருக்கிறோம்.


  ஆண்டுதோறும் திறமைவாய்ந்த, முகம் அறியப்படாத இளம் ஆய்வாளர்களுக்கு விருதுகளும் கொடுக்க உள்ளோம். ஆய்வாளர்களுக்கென்று தனித்த பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தரமான தேசிய அல்லது பன்னாட்டுக் கருத்தரங்குகளை நிகழ்த்துவதோடு. தாங்கள் கொடுக்கும் கையெழுத்துப் பிரதியை தட்டச்சு செய்து இணையப்புத்தக வடிவில் ISBN குறியீட்டுடன் இலவசமாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் தாங்கள் ஒரு தகவலாளியாகவும் செயல்பட விரும்புவதை வரவேற்கின்றோம். இதுபோல இன்னும் பல முயற்சிகள் மேற்கொண்டு நம் தாய்மொழியாம் தமிழை மேம்படுத்துவோம்.


  எம்மோடு இணைந்து செயல்படவும், புரவலர்களாகவும் கொடையாளர்களாவும் செயல்படவும், எங்களை வழிநடத்தும் தலைமை இடத்தை மேன்மைபொருந்திய தாங்களுக்கு வழங்கவும் மெத்த அன்போடு வரவேற்கிறோம்.