சங்க இலக்கியத்தில் மலர்கள் - ஆம்பல்


ஆம்பல்அல்லி அல்லது ஆம்பல்  நீரில்  வளரும்  ஒரு  கொடியும், அதில்  பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்,பொய்கை, நீர்ச்சுனைகளிலும், கழனிகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் மிகுதியாக மலர்ந்திருக்கும். கொடியில் முள்போன்ற அமைப்பு இருக்கும். அதனை, ‘அம்முள் நெடுங்கொடி அருவி ஆம்பல்’என்று வழங்கினர் (அகநானூறு, 96: 4-5). கார்காலத்தில் மழை பெய்து நீர் நிலைகள் நிறைந்திருக்கும்போது இது மிகுதியாக மலரும். அதனால்‘மாரி ஆம்பல்’ என்று குறித்தனர் (குறுந்தொகை, 117 :1). இது காலையில் நெய்தல் மலர்களுடன் மலர்ந்திருக்கும். மாலையில் குவியும். எகிப்தில் உள்ள நைல் நதியில் பூக்கும் நீலநிற அல்லி இரவில் மலர்ந்துபகலில் குவியும். ஆனால், அதே நதியில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

 

“நீர்ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய நேர்இதழ் ஆம்பல் நிரைஇதழ்

என்று கலித்தொகையும் (கலித்தொகை, 75 : 1-2),

“குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே வந்தன்று, வாழியோ மாலை”

எனக் குறுந்தொகையும் (122 : 2-3)  கூறுகின்றன.

செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து,ஆம்பல் மலர்கள் குவிந்ததை,“செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்” என்று திருப்பாவை (பாடல் 14) சுட்டுகிறது. ஆனால், இரவில்மலரும் ஆம்பல் இனங்களும் உள்ளன என்பதை,

“ஆம்பல் ஆய்இதழ் கூம்புவிட, வளமனைப் பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி(குறிஞ்சிப்பாட்டு, வரிகள் 223-224)

“மதி நோக்கி அலர்வீத்த ஆம்பல் வால்மலர்”            

என்ற இலக்கிய வரிகள் (கலித்தொகை, 72 : 6) சுட்டுகின்றன.

ஆம்பல் குளிர்ச்சியுடைய மலர். அதனால், ‘ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே’ (குறுந்தொகை, 84 : 5) என்று அதன் தன்மை தலைவியின் மேனித்தன்மையுடன் உவமித்துக் கூறப்படுகிறது. ஆம்பலில் வெள்ளாம்பல், செவ்வாம்பல் என்ற இரு வகை உண்டு. அதனால், ‘செவ்வாய் ஆம்பல்’ (பரிபாடல், 8 : 116) என்றும், ‘நாற்ற நாட்டத்து அறு காற் பறவை, சிறு வெள்ஆம்பல் ஞாங்கர் ஊதும்’(புறநானூறு, 70 : 11-12) என்றும் புலவர்கள் பாடுகின்றனர்.

ஆம்பல் மொட்டு கூம்பியிருக்கும். கொக்கைப்போலக் காட்சியளிக்கும். ‘கொக்கின் அன்ன கூம்பு முகை, கணைக்கால் ஆம்பல்’ (நற்றிணை, 230 : 2-3) என்பது சங்கப் புலவரின் கூற்று. நீரின் சிறு அசைவிலேயே அதன் பிணி அவிழ்வதை, ‘ஆம்பல், சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,வெளிய விரியும்’ (மேலது, 345 : 3-5)  என்று சுவைபடக் கூறுகிறார் மற்றொரு புலவர். ஆம்பல் பூ வாடிய பிறகு அதன் அழகும் மாறிவிடுவதை வீட்டில் குருவியின் இறகின் தோற்றத்துக்கு உவமையாவதை,‘ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன, கூம்பிய சிறகர் மனைஉறை குரீஇ’  என்ற குறுந்தொகை அடிகள்  (46 : 1-2) உணர்த்துகின்றன.

தலைவி நீரில் வளரக் கூடிய அல்லியின், உள்துளைபொருந்திய தண்டினுடைய நாரை உரித்தாற்போன்ற அழகு குறைந்த மாமை நிறம் உடையவள். குவளைப்பூப் போன்ற அழகு தங்கப் பெற்ற குளிர்ச்சியுள்ள கண்ணைக் கொண்டவள் என்பதை,

                                “நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்

                                 நார்உரித் தன்ன மதன்இல் மாமைக்

                                 குவளை அன்ன ஏந்துஎழில் மழைக்கண்”

என்று நற்றிணை (6 : 1-3)  சுவைபடக் கூறுகின்றது.

ஆமபல் பூ பொய்கையில் இருக்கும். அதன் தண்டு துளை உடையது. பூந்துகள் மஞ்சள் வண்ணம் கொண்டது. தலைவனைப் பிரிந்த தலைவியின் கண்கள் பசலை பரவியதால் மஞ்சள் வண்ணம் கொண்டதை,

                                “பொய்கை பூத்த புழைக்கால் ஆம்பல்

                                 தாதுஏர் வண்ணம் கொண்டன

                                 ஏதிலாளர்க்குப் பசந்த என்கண்ணே”

என்று ஐங்குறுநூறு (34 : 2-4) சுட்டுகின்றது.

திங்களைப் பார்த்து ஆம்பல் மலர்ந்ததை,“மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல்வால் மலர்” என்ற கலித்தொகைப் பாடலால் (72 : 6-8) புலப்படுகிறது. அரும்பாக இருந்து மலர்ந்த ஆம்பல் பூவைப் போன்றது மது உண்ணும் கலம் என்பதை, “கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல், தேம்பாய் உள்ள தம்கமழ் மடர்” என்ற புறப்பாடல் (383 : 7-8) புலப்படுத்துகின்றது.

மேலும் துணங்கைக் கூத்து ஆடிய இடத்தில் சிந்திய ஆம்பல் பூக்களை முதிய பசு தின்பதை, “கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின், வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்” என்று பதிற்றுப்பத்து (13 : 5-6) சுட்டுகின்றது.

ஆம்பல் மலர் மருத்துவ குணம் கொண்டது. உடல் சூடு, நீரிழிவு பாதிப்புகள், சிறுநீர் எரிச்சல் மற்றும் கண் நோய்கள் போன்றவை இதன் பல்வேறு பகுதிகளை மருந்தாகப் பயன்படுத்துவதன் மூலம் குணமடைகின்றன.அல்லி முளை தின்று, ஐம்பது நாள் தவமிருந்து, முல்லை முளை தின்று முப்பது நாள் தவமிருந்து மலடி ஒருத்தி பிள்ளை பெற்றதாக ஒரு நாட்டுப்பாடல் கூறுகிறது. இதிலிருந்து இந்த மலர்களுக்குப் பெண்களின் மலட்டுத் தன்மையைப் போக்கும் ஆற்றல் உண்டு என்பது தெரிய வருகிறது. அத்துடன் வெள்ளை அல்லி, செவ்வல்லி, கருநெய்தல் ஆகிய மூவகை பூக்களும் கருவுற்ற பெண்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.