பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை


மொழியியல் ஆராய்ச்சியில் பேரறிஞராக விளங்கிய வையாபுரியார்

பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை

 

தமிழ் அறிஞர் என்றாலே பிற மொழி கலப்பதை வெறுப்பதும், சமஸ்க்ருதத்தை வெறுப்பதும், இந்தியை இகழ்வதும், தனித் தமிழ் நாடு குறித்து கனவு காண்பதும் என்று ஒரு இலக்கணம் ஏற்பட்டு விட்டது. தமிழ் அறிவை விட, மேற்சொன்ன இலக்கணங்கள் பொருந்தினாலே ஒருவர் தமிழ்க் காவலர் ஆகிவிடுகிறார். இந்த விருப்பு வெறுப்புகள் ஏதுமற்ற தமிழ் அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் வியப்பாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு ஆச்சரியம் தான் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்.

மொழியியல் ஆராய்ச்சியில் பேரறிஞராக விளங்கிய வையாபுரியார், தமிழ் மட்டும் இல்லாமல், சம்ஸ்க்ருதம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். உ.வே.சாவுக்கு பின்னர் சீவக சிந்தாமணி போன்ற பல பழந்தமிழ் நூல்களை வெளிக்கொணர்ந்து பதிப்பித்த பெருமையும் இவரையே சாரும்.    தமிழ் இலக்கியங்களின் கால ஆராய்ச்சி செய்து வெளியிட்டது இவரது சாதனைகளுள் ஒன்று. இந்த ஆராய்ச்சிகள் தான் பலரது கடும் விமர்சனங்களை இவருக்கு பெற்றுத் தந்தது. விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் வையாபுரியார் தமது ஆராய்ச்சிகளை தொடர்ந்து வந்தார்.

திராவிட இயக்கம் சார்ந்து இவர் செயலாற்றாமல் போனதால், தொடர்ந்த கழக அரசுகளில் பெருமளவு அங்கீகாரம்  கிடைக்கவில்லை. இவரது சாதனைகள் இருட்டடிப்பு செய்யப் பட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.  இருந்தும் தமிழ் மொழியியலில் தமது உழைப்பால் இவர் நீங்காத இடம் பெற்றுள்ளார். இவரைப் போன்ற தமிழ் அறிஞர்களை போற்றாத பாவம், இன்று தமிழரின் மொழி ஆளுமையும், பன்மொழி அறிவும் குறைந்து விட்டன. தமிழன் ஊடக அடிமையாகி தமிழையே தொலைக்கும் காலம் நேர்ந்துள்ளது.

தமிழ் மட்டுமே இயற்கையான மொழி , கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த மொழி தமிழ் மொழி என்பன போன்ற உயர்வு நவிற்சி – உணர்ச்சி குவிப்புகள் ஏதுமின்றி கடந்த நூற்றாண்டில் முழுமையான ஆராய்ச்சி நோக்குடன் தமிழை அணுகியது திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் மட்டுமே என்று சொல்லலாம். எழுத்து வாரியாக தகுந்த இலக்கிய சான்றுகளுடன் தமிழில் சொற்களஞ்சியம்  (tamil lexicon) உருவாக்கியது இவரது வாழ்நாளைய சாதனை. சமகாலத்தில் பாவாணர் போன்ற பல அறிஞர்கள் அவரது இந்த சொற்களஞ்சியம் குறித்து குறை கூறினாலும் அத்தகைய ஒரு விரிவான  சொற்களஞ்சியம் அதன் பின்னர் ஒருவராலும் உருவாக்க முடியாதது அதன் சிறப்பை பறை சாற்றுகிறது. வையாபுரியார் இந்த தமிழ் பேரகராதியை உருவாக்கி சென்னைப் பல்கலைக் கழகம் மூலம் வெளியிடுவதற்கு முன்,  திருவிதாங்கூர் பல்கலை கழகத்தில் மலையாள சொற்களஞ்சியம் உருவாக்குவதிலும் பங்கு கொண்டிருக்கிறார்.

வடமொழி  தமிழ் மொழியை மாசு படுத்துகிறது – தூய தமிழ் – செந்தமிழ் என்று கூறுகிற தனித்தமிழ் வாதிகளைக் குறித்து இவர் கூறுகிறார், “தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது, நாகரிகம் அடைந்த ஒருவன் மிருகப் பிராயமான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்கு ஒப்பானது; தூயதமிழ்வாதம் பெரும்பாலும் வடமொழியை (சம்ஸ்கிருதம்) நோக்கி எழுந்தது. தூயதமிழ்வாதிகள் வடமொழிச் சொற்களைத் தவிர ஏனைய சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று கருதுகிறார்கள். மொழியாராய்ச்சி பயின்றவர்கள் அங்ஙனம் சொல்ல மாட்டார்கள். தமிழ் மக்கள் வடநாட்டாரோடு பிற நாட்டாரோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள். பிறநாட்டுச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன.

உதாரணமாக, பின்வரும் தொல்காப்பிய சூத்திரத்தைப் பாருங்கள்.

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை

இதிலே ‘ஓரை’ என்பது கிரேக்கச் சொல். இப்படிப்பட்ட பல பிறநாட்டுச் சொற்கள் பண்டைத் தமிழில் இருத்தல் வேண்டும். அவற்றை இப்போது இனம்காணவோ, வரையறுக்கவோ இயலாது. ஆராய்ச்சிகள் அதிகமாக, அதிகமாக காலப்போக்கில் அவற்றை வரையறுக்க இயலக்கூடும்.

இத்தகைய பிறமொழிச் சொற்களை எல்லாம் நீக்கியபின் எஞ்சிய சொற்களைத்தான் தூயதமிழ்ச் சொற்கள் என்று சொல்ல முடியும். அத்தகைய தூய தமிழ்ச் சொற்கள் அளவில் குறைவானவையாகவே இருக்கும். அவற்றைக் கொண்டு எவ்வகையானக் கருத்துகளை வெளியிட முடியும்?”.

ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும்.

திராவிட இயக்க அரசியலும், தமிழ் மொழிப்பற்று வெறியாக வளர்ந்து வந்த காலத்திலேயே தைரியமாக சம்ஸ்க்ருத வெறுப்பை ஒதுக்கி இவ்வாறு கூறுகிறார், “வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”.

இவர் காலத்தில் இருந்த சம்ஸ்க்ருத பற்றாளர்களை குறித்து இவ்வாறு சொல்கிறார் “தமிழர்களாகப் பிறந்தும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும் தமிழை இகழ்ந்து வடமொழி மட்டுமே கற்பது. இவர்களால் வடமொழிக்கும் பயனில்லை. அதற்கும் இவர்கள் கேடே விளைவிக்கிறார்கள். சில இடங்களில் வடமொழிக்குச் சிறப்பு கொடுத்து வடமொழியின் கீழ் தமிழ்போன்ற தாய்மொழிகள் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது நாட்டுக்கும் மொழிக்கும் பல தீங்குகளை விளைவிக்கக் கூடியது. தமிழ்மொழி இப்படிப்பட்டதை எதிர்த்து தனக்குரிய கௌரவத்தைப் போற்றிக் கொள்ளுதல் முக்கியமானது”.

திரு எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் காலம் [12/Oct/1891 - 17/Feb/1956].  இந்த மாதம் இவரது நினைவு தினம் வருகிறது. சிறந்த ஆராய்ச்சியாளரும், பதிப்பாளரும், சிந்தனையாளருமான வையாபுரியார் சுமார் மூவாயிரம் அரிய நூல்களை தமது உடமையாக கொண்டிருந்தார். இந்த அறிய நூல்கள் அனைத்தையும் கல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். ஆராய்ச்சி
களில் எவ்வித சார்புகளும் இல்லாமல் நேர்மையான முடிவுகளுக்கு விழைந்த இவர் “மறு ஆராய்ச்சி வரும்வரை இம்முடிபுகளை ஏற்றுக் கொள்ளலாம்” என்றே குறிப்பிடுவாராம்.

ஒன்றுக்கு மேற்பட்ட  மொழிகளில் ஆழ்ந்த ஞானம் இருந்தால் மட்டுமே, ஒரு சிறந்த மொழியிலாளராக விருப்பு வெறுப்பின்றி செயல் படமுடியும் என்பதற்கு வையாபுரி பிள்ளை அவர்கள் ஒரு சிறந்த உதாரணம். சுயநலத்துக்காக அரசியல் சார்பு நிலைகளை ஒட்டி ஆராய்ச்சி முடிவுகளை அறிவிக்காமல் உள்ளது உள்ளபடி தமது கருத்துக்களை எடுத்துரைத்த அவரது நேர்மை துணிவு பாராட்டுக் குரியது.